சில தெய்வங்களை மனதால் நினைத்தாலே போதும் அவர்களுக்காக பெரிய அளவில் பூஜை, புனஸ்காரங்கள், விரதங்கள் எதையும் நாம் மேற்கொள்ள வேண்டாம். மனதால் ஒரு நிமிடம் நினைத்து கண்ணீர் மல்க வேண்டினாலே போதும். எமக்காக வந்து நம் குறைகளை தீர்ப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு பெண் தெய்வம் தான் இந்த வாராஹி அம்மன். சப்த மாதர்களில் ஒருவர் தான் இந்த வாராஹி. இந்த தெய்வம் காட்டுப்பன்றியின் முகத்துடனும், ஒரு பெண் உடல் அமைப்பும் கொண்ட பெண் தெய்வம். ஒருவருக்கு தன் நிலை குலைந்து போகும் அளவிற்கு துயரம் இருக்கும் போது இந்த அம்மனை ஒரு கணம் மனதால் நினைத்து வேண்டினாலே போதும். அவர்களின் வேண்டுதலை உடனே தீர்த்து வைப்பவள். அத்தகைய மாபெரும் சக்தி வாய்ந்த தெய்வம்.
இந்த வாராஹி அம்மனை எப்படி வழிபட வேண்டும் என்பது பற்றிய பதிவுதான் இது. இவரை வணங்க பெரிய அளவில் நாம் எதையுமே செய்ய வேண்டாம். நாம் காலையில் எழுந்து குளித்து, நம் வீட்டில் உள்ள பூஜை அறையில் ஒரு தட்டிலோ அல்லது ஒரு சின்ன பாத்திரத்திலோ ஒரு மண் விளக்கை வைத்து நெய் ஊற்றி தீபம் ஏற்றினாலே போதும். அந்த தீபத்தின் மேல் கொஞ்சம் மல்லிகை பூ வையுங்கள் அல்லது சிவப்பு நிறத்தில் உள்ள செம்பருத்தி, செவ்வரளி, இப்படி ஏதாவது உங்களிடம் எந்த பூ இருக்கிறதோ, அதை வைத்து விடுங்கள்.
இவர்களுக்கு நெய்வேத்தியமாக சக்கரவள்ளி கிழங்கு வைக்க வேண்டும். அது மிகவும் மலிவான ஒரு பொருள் தான். இல்லை என்றால் பயறு வகைகளில் செய்த சுண்டல், அன்னாசி பழம், மாதுழம் பழம், இப்படி உங்களால் இயன்ற ஏதாவது ஒரு சிறிய அளவிலான பொருளை வைத்தாலே போதும். அதன் பின்னர் நீங்கள் ஏற்றிய தீபத்தின் முன் அமர்ந்து இந்த வாராஹி அம்மனுக்கான மந்திரத்தை கூறி மனதார உருகி வேண்டினாலே போதும். உங்களின் குறைகளை கேட்க இந்த அம்மன் செவி சாய்ப்பாள்.
அத்துடன் வாராஹி காயத்ரி என்ற இந்த மந்திரத்தையும் உச்சரியுங்கள்: ஓம் ச்யாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாயை தீமஹி தன்னோ வாராஹி ப்ரசோதயாத் நாம் நன்றாக இருக்கக் கூடாது என நினைக்கும் எதிரிகளிடம் இருந்து நம்மை காக்கும் சக்தி வாய்ந்தவர். உங்களுக்கு ஏதாவது மனக்குறையோ, அவமானமோ, ஏன் நீங்கள் நிலை குலைந்து இருக்கும் போது கூட இந்த தீபத்தின் முன் அமர்ந்து, ‘இதை இவர்கள் எனக்கு செய்து விட்டார்கள் இதனால் நான் இத்தனை துன்பம் அனுபவிக்கிறேன் இவர்களை நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று வேண்டினாலே போதும்.
உங்கள் குறையை தீர்த்து வைப்பாள். உங்களின் இந்த நிலைக்கு காரணமாணவர்களே உங்களிடம் திரும்பவும் வந்து மன்னிப்பு கேட்கும் அளவிற்கு மாற்றி விடுவாள். இதில் முக்கியமாக நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். பூஜை அறையில் எத்தனை விளக்கை ஏற்றினாலும் இவர்களுக்காக ஒருவிளக்கு தனியாகத்தான் ஏற்ற வேண்டும். அந்த விளக்கு வாராஹி அம்மனுக்கு உரியது என்று வைத்து விடுங்கள். இந்த விளக்கை காலை 6 மணிக்குள்ளாகவோ அல்லது மாலை 6 மணிக்கு மேல் 10 மணிக்குள்ளாக, முதல் நாளில் எந்த நேரத்தில் தொடங்குகிறீர்களோ அந்த நேரத்தையே தொடர்ந்து கடைபிடியுங்கள்.
இதை நீங்கள் தொடர்ந்து செய்து வாருங்கள். உங்களுக்கு தொல்லை தரும் எதிரி என்று ஒருவர் இருக்கவே மாட்டார். ஆனால் இதில் மறக்க கூடாத முக்கியமான ஒன்று நீங்கள் வைக்கும் வேண்டுதலில் நியாயம் உங்கள் பக்கம் இருக்க வேண்டும். தீமைக்கு ஒரு காலமும் துணை போக மாட்டாள் வாராஹி. வாராஹி அம்மனை சுத்தமான மனதுடன் மனதார வேண்டுதல் செய்து வெற்றிவகை சூடுங்கள்.